வறண்டு கிடக்கும் கண்மாய்கள்


வறண்டு கிடக்கும் கண்மாய்கள்
x

மாவட்டத்தில் அடிப்படை ஆதாரமான கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்


மாவட்டத்தில் அடிப்படை ஆதாரமான கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாவாரி விவசாயம்

விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் தொழில்கள் இருந்த போதிலும் மாவட்டத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் விவசாயமே கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மாவட்ட விவசாயிகள் மானாவாரி விவசாயத்தை நம்பி உள்ளனர். கடந்த காலங்களில் மாவட்டம் வறட்சியில் சிக்கி தவித்த நிலையில் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் கிராம மக்கள் கிராமங்களை விட்டு பஞ்சம் பிழைக்க வெளியேறிய நிலையும் ஏற்பட்டது உண்டு. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் யூனியன்களின் கட்டுப்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்மாய்கள் உள்ளன.

குடிமராமத்து முறை

இந்தநிலையில் கடந்த காலங்களில் ஐரோப்பிய யூனியன் நிதி உதவியால் இந்த கண்மாய்கள் மராமத்து செய்யப்பட்டு வந்தன. ஐரோப்பிய யூனியன் நிதி உதவி தொடர்ந்து கிடைக்காத நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் குடிமராமத்து முறை அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் இந்த குடிமராமத்து முறையும் முறையாக அமல்படுத்தாத நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 65 கண்மாய்கள் மட்டுமே குடிமராமத்து முறையில் மராமத்து செய்யப்பட்டது.

இதர கண்மாய்கள் ஆக்கிரமிப்புகளால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் கண்மாய்கள் பாளம் பாளமாக வெடித்து பாலைவனமாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாராமுகம்

இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதநிலை தொடர்கிறது. அதிலும் மாவட்டத்தில் நீர் வளம் மேம்படுத்தப்படுமென அறிவித்த மத்திய அரசும் அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நிதி ஒதுக்கீடும் செய்யாத நிலையில் பாராமுகமாகவே உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து சீரமைக்க வேண்டிய கண் மாய்களை மராமத்து செய்ய தேவைப்படும் நிதியை மதிப்பிட்டு அரசிடம் பரிந்துரை செய்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து கண்மாய்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் இனி வரும் காலங்களில் மாவட்டத்தில் நடைபெறும் மானாவாரி விவசாயமும் மாயமாகிவிடும் நிலை ஏற்பட்டு விடும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story