"எடப்பாடி பழனிசாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது"


எடப்பாடி பழனிசாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது
x
தினத்தந்தி 24 Feb 2023 6:45 PM GMT (Updated: 24 Feb 2023 6:46 PM GMT)

“எடப்பாடி பழனிசாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது” என மதுரையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரை

"எடப்பாடி பழனிசாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது" என மதுரையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஜெயலலிதா பிறந்த நாள்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் கோச்சடை பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா பிறந்தநாளில் மதுரையில் மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இரட்டை இலை சின்னமானது, தற்போது தவறானவர்கள் கையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி அதிகாரம் இருந்தபோதே, லட்சிய நோக்கத்துக்காக எங்களால் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது.

வியாபார நோக்கோடு, லாபத்திற்காக எடப்பாடி பழனிசாமியுடன் சிலர் இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. வளர்ந்துவரும் இயக்கமாக உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலை தவிர எந்த தேர்தலிலும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மை. ஆனால், இரட்டை இலை துரோகிகளின் கையில் இருப்பதால்தான் தி.மு.க. வெற்றி பெற்றது. எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

மத்திய அரசு உதவியுடன்...

எடப்பாடி பழனிசாமியின் வெற்றி என்பது, பண பலத்தால் வந்தது. மத்திய அரசின் உதவியுடன், ஆட்சி பொறுப்பை ஏற்றார். அவர் இடத்தில் யார் இருந்தாலும் அதிகாரத்தில் இருந்திருக்கலாம். இரட்டை இலை சின்னம் இருந்தும் எடப்பாடி பழனிசாமியால் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆணவம், அகங்காரமும், பணத்திமிரும்தான் காரணம்.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோதும்கூட அவர்களால் மீண்டும் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. அ.தி.மு.க.வை பிராந்திய, வட்டார கட்சியாக மாற்றிவிட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமியின், அரசியல் தவறால் தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்கு கூட அவரால் வர முடியாத நிலை இருந்தது. எங்களுக்கு துரோகம் செய்ததால், ஒரு சிலரை பார்த்து அவருக்கு அச்சம் இருக்கலாம்.

மக்களை ஏமாற்றி விட்டார்

எடப்பாடி பழனிசாமி, மெகா கூட்டணி என்றார். ஆனால் தே.மு.தி.க., பா.ம.க. வெளியேறிவிட்டது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை அறிவித்து முறையாக நடைமுறைப்படுத்த முடியாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். பா.ம.க. அவரிடம் இருந்து நல்ல வேலையாக தப்பித்துவிட்டது. வேண்டாம் என ஒதுங்கிவிட்டனர். ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வன்னியர் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னம் கையில் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் இந்த சுற்றில் தற்காலிகமாக வெற்றிபெற்றுள்ளார். தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறியுள்ளனர். தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை. அவரது வெற்றி தற்காலிகமானது. அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால் தி.மு.க.வை வெல்ல முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வருவார்கள் என்பது காலத்தின் தீர்ப்பாக இருக்கும். கட்சி அவர் வசம் சென்று விட்டது. ஆனால் அவரிடம் உள்ள தொண்டர்கள் விரைவில் வெளியே வருவார்கள். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர சுவாசம் உள்ளவரை போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story