புதுச்சத்திரம் அருகே தடுப்புச்சுவரில் மோதி சரக்கு வாகனம் கவிழ்ந்து 220 வாத்துகள் செத்தன
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே தடுப்புச்சுவரில் மோதி சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 220 வாத்துகள் பரிதாபமாக இறந்தன.
சரக்கு வாகனம் கவிழ்ந்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து 1,200 வாத்துகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூருக்கு சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. சரக்கு வாகனத்தை தர்மபுரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த சரக்கு வாகனம் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலை நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
220 வாத்துகள் சாவு
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 220 வாத்துகள் சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தன. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் அஜித்குமார் காயம் அடைந்தார். இந்த விபத்தால் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தை மீட்டு அப்புறப்படுத்தினர். மேலும் மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டு, போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் உயிர் தப்பிய வாத்துகளை மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.