நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்


நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் டாக்டர் கலைசெல்வி என்பவர் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அவர் ஆஸ்பத்திரிக்கு சரிவர வருவதில்லை, கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை, ஆஸ்பத்திரியில் எந்த பணிகளும் செய்வதில்லை என தொடர்ந்து நிர்வாக ரீதியான புகார்கள் வந்தன. இதற்கிடையில் நேற்று முன்தினம் சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 பேர் இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆஸ்பத்திரிக்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பணிகளை துரிதப்படுத்த வேண்டிய கண்காணிப்பாளர் ஆஸ்பத்திரிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சமீரன் ஆஸ்பத்திரிக்கு வந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கண்காணிப்பாளர் கலைசெல்வியிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று கேட்டார். ஆனால் அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சமீரன், மருத்துவ கல்வி இயக்குனருக்கு கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வியை பணியிடை நீக்கம் செய்வதற்கு பரிந்துரை செய்தார்.

இதை ஏற்று கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளராக டாக்டர் கார்த்திகேயன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதுகுறித்து மருத்துவ துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி மீது நிர்வாக ரீதியாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் காரணமாக கலெக்டர் பரிந்துரையின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.


Next Story