தொடர் மழையால் 25 ஏரி, குளங்கள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 25 ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை இடைவிடாது கொட்டியது. அதன் பிறகு காலை 8 மணி முதல் மழை ஓய்ந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியது.
இதற்கிடையே மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நீர்வரத்து வாய்க்கால்களிலும், ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.90 அடிக்கும், 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையின் நீர்மட்டம் 8.7 அடிக்கும், 29.72 அடி கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 20.20 அடிக்கும் உயர்ந்துள்ளது.
வறண்ட 13 நீர்நிலைகள்
இதேபோல் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள 6 குளங்களில் 2-ம், மேல்புவனகிரியில் உள்ள 8 ஏரி, குளங்களில் ஒரு ஏரியும், சிதம்பரத்தில் உள்ள ஒரு குளமும், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் உள்ள 3 நீர்நிலைகளில் 2-ம் நிரம்பி வழிகின்றன.
மேலும் கடலூர் தாலுகாவில் உள்ள 33 ஏரி, குளங்களில் 5 ஏரி, குளங்களும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி ஆகிய தாலுகாக்களில் உள்ள 177 ஏரி, குளங்களில் இதுவரை 14 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
அதாவது மாவட்டத்தில் உள்ள 228 ஏரி, குளங்களில் 25 நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும் 16 ஏரி, குளங்கள் 75 சதவீதமும், 36 குளங்கள் 50 சதவீதமும், 139 ஏரி, குளங்களில் 50 சதவீதத்திற்கு கீழும் தண்ணீர் உள்ளது. இதுதவிர தொடர் மழை பெய்தும் மாவட்டத்தில் உள்ள 13 ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே நீர்நிலைகள் அனைத்தும் தொடர்ந்து நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.