தொடர் மழை காரணமாக காலண்டர் அட்டை தயாரிக்கும் பணி பாதிப்பு
காலண்டர் அட்டை தயாரிக்கும் பணி
தொடர் மழை காரணமாக காலண்டர் அட்டை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
காலண்டர் அட்டை
ஈரோட்டில் தினசரி காலண்டர் அட்டை தயாரிக்கப்பட்டு சிவகாசி, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக காலண்டர் அட்டை தயாரிப்பு பணி 4 மாதங்களுக்கு நடைபெறும்.
வருகின்ற 2023-ம் ஆண்டுக்கான காலண்டர் அட்டை தயாரிக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் தொடர் மழையின் காரணமாக அட்டை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக அட்டை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி பாதிப்பு
இது குறித்து காலண்டர் அட்டை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-
ஈரோட்டில் இருந்து சிவகாசி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு காலண்டர் அட்டை தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு கடந்த 1½ மாதங்களாக தொடர் மழையால், அட்டையை காய வைக்க முடியாமல் தயாரிப்பு பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 10 லட்சம் காலண்டர் ஆர்டர் பெறப்பட்ட நிலையில், தற்போது 60 சதவீதம் கூட முடிக்க முடியவில்லை.
காலண்டர் அட்டை தயாரிப்பு பணிகள் வழக்கமாக ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக ஜனவரி மாதம் இறுதிவரை தொடர்ந்து பணிகள் நடைபெற்றால் மட்டுமே அனைத்து ஆர்டர்களையும் முடிக்க முடியும். மேலும் மழை பெய்ததால் குறித்த நேரத்தில் காலண்டர்களை அனுப்பி வைக்க இயலாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.