நோய் தாக்குதலால் செவ்வந்தி பூ உற்பத்தி பாதிப்பு
கருங்கல் நோய் தாக்குதலால் செவ்வந்தி பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அருள்புரம்
கருங்கல் நோய் தாக்குதலால் செவ்வந்தி பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செவ்வந்தி பூ சாகுபடி
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் 9 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவர். அவ்வாறு சரஸ்வதி தேவியை கொண்டு நிறைவு பெறுவதால் அந்த இறுதி நாள் சரஸ்வதி பூஜை என அழைக்கப்படுகின்றது. மேலும் கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வணக்கிடும் திருநாளே சரஸ்வதி பூஜை ஆகும். இந்த பூஜைக்கு மிகவும் முக்கியமானது செவ்வந்தி பூ ஆகும்.
வரும் 23 ந் தேதி (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நோய் தாக்குதலால் செவ்வந்தி பூ உற்பத்தியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வந்தி பூ சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் அருகே உள்ள வடுகபாளையத்தில் செவ்வந்தி பூ சாகுபடி செய்துள்ள விவசாயி ராஜ்குமார் கூறியதாவது:-
கருகல்
எங்கள் சொந்த ஊர் நிலக்கோட்டை. கணபதிபாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தில் நிலத்தை குத்தகைக்கு பிடித்து விவசாயம் செய்து வருகிறோம். ஓசூரில் இருந்து 12ஆயிரம் செவ்வந்தி பூ நாற்றுகளை வாங்கி வந்து 2 ஏக்கரில் நடவு செய்துள்ளோம். ஒரு நாற்றின் விலை ரூ. 5 ஆகும். நடவு செய்து 8 மாதங்கள் ஆகிறது. இதுவரைக்கும் சுமார் 15 முறை மருந்து அடித்து உள்ளோம். ஒரு முறை மருந்து அடிக்க 10 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது.இதுவரைக்கும் ரூ.3 லட்சம் செலவு ஆகியுள்ளது. கருகல் நோய் தாக்குதல் உற்பத்தியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் அடித்தும் நோய் தாக்குதல் குறையவில்லை. வேளாண்மைத்துறை அதிகாரிகள் யாரும் வருவதில்லை. ஆயுதபூஜைக்கு செவ்வந்தி பூ பறிக்கும் நிலையில் நோய் தாக்குதலால் எங்களுக்கு ரூ.3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இ்வவாறு அவர் கூறினார்.
-