ஆனைமலையில் போதிய மழை இல்லாததால் முதல் பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம்
ஆனைமலையில் போதிய மழை இல்லாததால் முதல் பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் இல்லாமல் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
ஆனைமலை
ஆனைமலையில் போதிய மழை இல்லாததால் முதல் பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் இல்லாமல் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
5,400 ஏக்கர் நெல் சாகுபடி
ஆனைமலை ஒன்றியத்தில் 2 போகத்தில் 5,400 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயகட்டு பாசனம், பழைய ஆயக்கட்டு பாசனம் வழியாக தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2-ம் போகத்தில் நெல் நடவு செய்யப்பட்டு நன்றாக அறுவடையும் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு கணிசமான வருமானமும் கிடைத்தது. இந்தநிலையில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் நடப்பாண்டு கடந்த 20 நாட்கள் தாமதமாக மழை பொழிந்தது. இதன் விளைவாகவும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் ஆழியார் அணை, ஆழ்துளை கிணறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இருப்பினும் பாசன வசதிக்காக கடந்த ஜூன் மாதம் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
நெல் பயிரிட விவசாயிகள் முன்வரவில்லை
தண்ணீரை வீணடிக்காமல் பயன்படுத்த விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இருப்பினும் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிட முன் வரவில்லை.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆடிப்பட்டத்திற்கு நடவு செய்ய 30 நாட்களுக்கு முன்பு விதைகள் முளைக்க வைக்கப்பட்டு நெல் நடவு செய்ய தயாரான நிலையில் வைக்கப்படும். நடப்பாண்டு போதிய மழை இல்லாததாலும், அணையில் நீர்மட்டம் குறைந்ததாலும் நெல் பயிரிட விவசாயிகள் முன் வரவில்லை. இதன் விளைவாக விலை நிலங்களில் முட்புதர்கள் நான்கு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளது. மேலும் புற்களும் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பொழியும் பட்சத்தில் நெல் நடவு செய்ய விவசாயிகள் முன் வருவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.