மழை இல்லாததால் 133 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
மழை இல்லாததால் முல்லைப்ெ்பரியாறு அணை நீர்மட்டம் 133 அடியாக குறைந்தது
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர தொடங்கியது. கடந்த 18-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136.65 அடியாக காணப்பட்டது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை. மேலும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 3 அடி குறைந்துள்ளது. இன்று அணையின் நீர்மட்டம் 133.45 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 538 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1733 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.