சாலை வசதி இல்லாததால் 3 கி.மீ. தூரம் மின் கம்பங்களை தோளில் சுமந்து சென்ற மலைக்கிராம மக்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்


சாலை வசதி இல்லாததால்  3 கி.மீ. தூரம் மின் கம்பங்களை  தோளில் சுமந்து சென்ற மலைக்கிராம மக்கள்  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
x

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

ஈரோடு

சாைல வசதி இல்லாததால் சுமார் 3 கி.மீ. தூரம் மின்கம்பங்களை தோளில் சுமந்து மலைக்கிராம மக்கள் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலை வசதி இல்லை

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கேர்மாளம் ஊராட்சிக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் மீசைக்கோனூரான் தொட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு சோளகர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 15 குடும்பத்தினர் உள்ளனர். இங்கு இதுவரையிலும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. சரியான சாலை வசதியும் இல்லை.

இதன் காரணமாக இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். எனவே தங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மின்கம்பங்களை சுமந்து சென்றனர்

இதை ஏற்று மின்வாரிய அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து மின்இணைப்பு வழங்க 2 மின்கம்பங்களை லாரியில் கானக்கரை கிராமத்துக்கு எடுத்து வந்தனர். அங்கிருந்து மீசைக்கோனூரான் கிராமத்துக்கு செல்ல சாலை வசதி கிடையாது. மேலும் மேடான பகுதியாகும். இதனால் மின் கம்பங்களை அங்கேயே இறக்கி வைத்து விட்டு சென்று விட்டனர்.

இதைத்தொடர்ந்து மீசைக்கோனூரான் பழங்குடியின மக்கள் தங்கள் கிராமத்துக்கு மின்கம்பங்களை கொண்டு் செல்ல அவற்றின் 3 இடங்களில் மரக்கட்டைகளை கட்டினார்கள். பின்னர் ஆண்கள், பெண்களும் தோளில் சுமந்தபடி 3 கி.மீ. தூரத்தில் உள்ள தங்கள் மலைக்கிராமத்துக்கு மின்கம்பங்களை கொண்டு சென்றனர். இந்த காட்சியை அப்பகுதியில் உள்ள ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story