குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால்  ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Nov 2022 6:45 PM GMT (Updated: 27 Nov 2022 6:47 PM GMT)

கடமலைக்குண்டு அருகே குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தேனி

கடமலைக்குண்டுவை அடுத்த குமணன்தொழு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள தெருவில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் குழாய்கள் பெரும்பாலும் சாக்கடை கால்வாய் வழியாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது.

இதனை குடிக்கும் பொதுமக்கள் காய்ச்சல், தொண்டை வலி, சளி உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் பணம் கொடுத்து கேன்களில் குடிநீர் வாங்கி அதனை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் குழாய்களை சீரமைக்க கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை குடம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிடித்து கொண்டு குமணன்தொழு ஊராட்சி மன்ற அலுவலகத்தி்ற்கு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் உள்பட யாரும் இல்லாததால் பொதுமக்கள் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து சிறிது நேரம் கோஷமிட்டு கலைந்து சென்றனர். மேலும் குடிநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story