மும்முனை மின்சாரம் வழங்காததால் குறுவை சாகுபடி பணி பாதிப்பு
சீர்காழி பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்காததால் குறுவை சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்காததால் குறுவை சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, மாதானம், புத்தூர், கொள்ளிடம், அகனி, வள்ளுவக்குடி, கொண்டல், அகர எலத்தூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, திருமுல்லைவாசல், எடமணல், பழையபாளையம், நல்லூர், ஆச்சாள்புரம், குன்னம், பெரம்பூர், தாண்டவன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தற்போது பம்பு செட்டு மூலம் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மும்முனை மின்சாரம்
இந்த நிலையில் விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு மற்றும் பகல் நேரங்களில் முறையாக மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் உழவு செய்யப்பட்ட வயல்கள் காய்ந்து விடுவதால், மீண்டும் உழவு செய்யும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.
முழுமையாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இல்லை என்றால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி கேள்விக்குறியாகிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் செலவு
இதுகுறித்து கழுமலையாறு பாசன சங்க நிர்வாகி ராமானுஜம் கூறுகையில், சீர்காழி பகுதியில் உள்ள விவசாயிகள் தீவிரமாக குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் குறுவை சாகுபடிக்கு தயார் செய்யப்பட்ட வயல்கள் காய்ந்து வீணாகி வருகிறது. இதனால் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு குறிப்பிட்ட மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும், மாறாக அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் மின்சாரம் வழங்குவதில் எந்த பயனும் இல்லை.
நடவடிக்கை
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறுவை சாகுபடி பணியை மேற்கொள்ள மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.