முறையாக தெரிவிக்கப்படாததால்திட்ட செயல்பாடுகள் குறித்துபொதுமக்களிடம் கூற முடியாமல் தவிக்கிறோம்மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்


முறையாக தெரிவிக்கப்படாததால்திட்ட செயல்பாடுகள் குறித்துபொதுமக்களிடம் கூற முடியாமல் தவிக்கிறோம்மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
x

முறையாக தெரிவிக்கப்படாததால் திட்ட செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கூற முடியாமல் தவிக்கிறோம் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பினா்

ஈரோடு

கவுன்சிலர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திட்டப்பணிகள் செய்யப்படுவதால், அதுகுறித்து மக்களிடம் பதில் கூற முடியாமல் தவித்து வருவதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பித்தீர்த்தனர்.

மாநகராட்சி கூட்டம்

ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பி.கே.பழனிச்சாமி, காட்டு சுப்பு என்கிற சுப்பிரமணியம், சசிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

கவுன்சிலர்கள் புலம்பல்

அனைத்து கவுன்சிலர்களும் பொதுவாக ஒரே குற்றச்சாட்டாக, கவுன்சிலர்களுக்கான மரியாதை வழங்கப்படுவது இல்லை. அரசின் திட்ட செயல்பாடுகள் கூட முறையாக தெரிவிக்கப்படுவதில்லை. பொதுமக்கள் எங்களிடம் கேட்டால் பதில் கூற முடியாமல் தவிக்கிறோம் என்று புலம்பினர்.

குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில் வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் புதிய ஒப்பந்ததாரர் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த விவரங்கள் இதுவரை கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் வார்டு தூய்மைப்பணி மேஸ்திரிகளுக்கான கூட்டத்தை ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் நடத்தி உள்ளனர் என்று பலரும் குற்றம்சாட்டினர்.

மதிப்பது இல்லை

அதைத்தொடர்ந்து ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் பதில் அளிக்கும்போது, திட்டம் முறையாக தொடங்கவில்லை. ஒப்பந்ததாரர் செய்ய வேண்டிய பணிகள், அதற்கான தொழிலாளர்கள், ஊதியம், சேகரிக்கப்படும் குப்பை, தேவையான வாகனங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த நுண் ஆய்வு நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும்போது, 'காவிரிக்கரை ஆத்மா எரி தகனமேடை பணியாளர்கள் கூட கவுன்சிலர்கள் என்றால் மதிப்பது இல்லை மாநகராட்சி அதிகாரிகளும் எங்கள் வார்டு பிரச்சினையான தெருவிளக்கு அமைத்தல், சாலை போடும் பணிகள் என்று எந்த கோரிக்கையையும் கண்டுகொள்வதில்லை' என்று குற்றம்சாட்டி பேசினார்கள்.

வாக்கு கேட்க முடியாது

எங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்போம் என்று கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறோம். மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. நாங்கள் எதை சொல்லி அதே மக்களிடம் செல்வோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் கூறிவிட்டு சென்று விடுகிறீர்கள். மக்களின் தேவைகளை செய்து கொடுக்காமல் அவர்களிடம் நாங்கள் பேச முடியுமா?. என்று அவர்கள் புலம்பித்தீர்த்தனர்.

மண்டல தலைவர் கோரிக்கை

கூட்டத்தில் கலந்துகொண்ட மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி ஒரு கோரிக்கை மனுவை மேயர் நாகரத்தினம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகியோரிடம் வழங்கினார். அதில், சென்னை கதீட்ரல் சாலை மேம்பாலம் நடைபயிற்சி செல்பவர்களுக்காக தினமும் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை அடைக்கப்படுவதுபோல, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மேம்பாலத்தையும் இரவு 10 மணி முதல் காலை 7 மணிவரை மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அதிகாலையில் நடைபயிற்சியாளர்கள் போக்குவரத்து அச்சமின்றி நடக்க உதவியாக இருக்கும் என்று கூறி இருந்தார்.

இதேபோல் 29-வது வார்டு கவுன்சிலர் செல்லப்பொன்னி, 49-வது வார்டு கவுன்சிலர் உள்பட பல கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

கூட்டத்தில் துணை ஆணையாளர் சுதா, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், செயற்பொறியாளர் சண்முகவடிவு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story