மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நாகலாபுரம் அரசு கல்லூரிக்கு விடுமுறை
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நாகலாபுரம் அரசு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ளநாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 540 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு பிரதான சாலையில் வரும் வழியில் உள்ள ஓடை மீது பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது கல்லூரிக்கு வரும் உயர்மின் அழுத்த ஒயர்கள் சேதமடைந்தது. மேலும், அங்குள்ள மின்மாற்றியும் பழுதடைந்தது. இதனால் கல்லூரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அலுவலக பணிகள் மட்டுமின்றி, மாணவர்களுக்கு குடிநீர் வழங்க மின் மோட்டாரை இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராமலிங்கம் மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தார். அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை மட்டும் நீக்கினர். அங்கிருந்து கல்லூரிக்கு மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதை பொதுப்பணித்துறை தான் சரி செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் நெல்லை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்து அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மின்தடை நீடித்ததால் நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று வரை 1½ நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடுப்பட்டது. நெல்லையிலிருந்து இன்று(வியாழக்கிழமை) பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து, மின் விநியோகத்தை சரி செய்தவுடன் கல்லூரி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.