வரத்து குறைந்ததால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
வரத்து குறைந்ததால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
கிணத்துக்கடவு
வரத்து குறைந்ததால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
தக்காளி சாகுபடி
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் முக்கிய தொழிலாக தக்காளி விவசாயம் உள்ளது. கிணத்துக்கடவு, சொக்கனூர், கல்லாபுரம், வடபுதூர் சிங்கையன் புதூர், நெம்பர் 10 முத்தூர், கோவில்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல் முள்ளுப்பாடி, கோடங்கிபாளையம், அரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தக்காளி செடிகளை பயிரிட்டு வந்தனர். எப்போதும் கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சீசன் ஜனவரி மாதம் வரை நீடிக்கும் இந்த ஆண்டு இறுதி கட்ட நேரத்தில் தக்காளி செடிகளில் தக்காளி காய்ப்பு அதிகமாக இருந்தது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் அந்த சமயத்தில் உற்பத்தியாகும் தக்காளிகளுக்கு கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் உரிய விலை கிடைக்காமல் இருந்தது. ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 13 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையானதால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் செய்த விவசாயிகள் தக்காளி விவசாயம் மேற்கொள்ள செய்த செலவு பணம் கூட எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்த காரணத்தினால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் தக்காளி செடிகள் கருகி தக்காளிகளும் நாசமானது. இதனால் தற்போது கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் தக்காளி விவசாயம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்த அளவை வந்திருந்தது. வரத்து குறைவால் கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 33 ரூபாய் வரை விற்பனையானது.
திடீரென தக்காளி விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென அதிகரித்துள்ளதால் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் சில்லறை விலையாக ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.