"திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை" - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்


திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
x

திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, அடையார், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கே.கே.நகரில் மழைநீர் வடிகால், தண்ணீர் அகற்றும் பணியை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறுகையில்,

"திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தண்ணீர் தேங்கவில்லை. தெருக்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80% நிறைவடைந்தன. அனைத்து பணிகளும் முடிவடையும் போது சென்னையில் தண்னீர் தேங்காது. பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்" என்று கூறினார்.


Next Story