தேனியில் கொட்டித்தீர்த்த கனமழையால் நிரம்பி வழியும் நீர்நிலைகள்; கோவிலுக்குள் புகுந்த தண்ணீர் : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு


தேனியில் கொட்டித்தீர்த்த கனமழையால்  நிரம்பி வழியும் நீர்நிலைகள்; கோவிலுக்குள் புகுந்த தண்ணீர் :  கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி

கொட்டித்தீர்த்த கனமழை

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 37.6 செ.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக ஆண்டிப்பட்டியில் 8.3 செ.மீ., அரண்மனைப்புதூரில் 5.9 செ.மீ., பெரியகுளத்தில் 3.5 செ.மீ., சோத்துப்பாறையில் 6.4 செ.மீ., வைகை அணையில் 5.4 செ.மீ. மழை பெய்தது. வீரபாண்டி, போடி, உத்தமபாளையம் உள்பட பல இடங்களிலும் மிதமான மற்றும் கனமழை பெய்தது.

போடி, தேனி பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தேனியில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சடையால் முனீஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.

நேற்று காலை வெள்ளம் வடிந்த நிலையில் கோவில் வளாகத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள், நாணல் புதர்கள், குப்பைகள் குவிந்து கிடந்தன. மேலும் கோவில் வளாகம் முழுவதும் மண் படிந்து சேறும், சகதியுமாக மாறியது.

தூய்மை பணி

இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு வந்து சுத்தம் செய்ய முயற்சி செய்தனர். பின்னர் இந்து எழுச்சி முன்னணியினர், நகராட்சி துணைத்தலைவர் தலைமையில் தன்னார்வலர்களும் அங்கு வந்து, தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. மக்களின் கூட்டு முயற்சியால் கோவில் வளாகத்தில் கிடந்த புதர்கள், மண் அகற்றப்பட்டது.

அருவியில் வெள்ளப்பெருக்கு

பெரியகுளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக கல்லாற்று பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் வராக நதியில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோர பகுதியில் இருந்த மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நேற்று காலை ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது.

இந்நிலையில் நேற்று காலை முதலே மீண்டும் மழை பெய்தது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 3-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட டிராக்டர்

போடி அருகே உள்ள மேலப்பரவில் இருந்து எலுமிச்ைச மூட்டைகளை ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று நேற்று முன்தினம் போடிக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை போடியை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி சென்றார். டிராக்டரில் வியாபாரியான இப்ராகிம் மற்றும் 3 பெண்கள் சென்றனர். கொட்டக்குடி ஆற்றில் வழியாக சென்றபோது டிராக்டர் ஆற்றில் சிக்கி கொண்டது.

இதையடுத்து டிரைவர் டிராக்டரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டிராக்டர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் உள்பட 4 பேரும் டிராக்டரில் இருந்து குதித்து ஆற்றின் கரையை அடைந்து உயிர் தப்பினர். இதற்கிடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்ட டிராக்டர் பள்ளத்தில் மூழ்கியது.

மஞ்சளாறு அணை

தேவதானப்பட்டியில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 219 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஜூலை மாதம் 31-ந் தேதி நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையே கடந்த மாதம் 15-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே நீடிக்கிறது. தொடர்ந்து 100 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியிலேயே உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 158 கன அடியாக உள்ளது. இந்த நீர் அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.


Next Story