திருநின்றவூர் நகராட்சியில் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி - காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


திருநின்றவூர் நகராட்சியில் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி - காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
x

திருநின்றவூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர், நகரமைப்பு ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பேரூராட்சியாக இருந்தது. அதைத்தொடர்ந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 18 வார்டாக இருந்த திருநின்றவூர் நகராட்சியில் தற்போது 27 வார்டுகள் உள்ளது. திருநின்றவூரில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்த நகராட்சியில் தற்போது நகராட்சி ஆணையர், 2 கிளார்க்குகள், 2 பில் கலெக்டர்கள், ஒரு ரெக்கார்டு கிளார்க் என 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

தரம் உயர்த்தப்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் என்ஜினீயர், சுகாதார ஆய்வாளர், நகரமைப்பு ஆய்வாளர், கணக்கர், கிளார்க், பில் கலெக்டர், மேனேஜர், சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்கள் கடந்த 1 வருடமாக அதிகாரிகள் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது.

திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் இருந்து ஒவ்வொரு அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு நாள் திருநின்றவூர் நகராட்சிக்கு வந்து செல்கின்றனர். இதனால் நகராட்சியில் முக்கிய பணிகள் எதுவும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வரி செலுத்துவது, பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது, கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக எந்த அதிகாரியை சந்திப்பது என்று தெரியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் எந்த திட்டத்திற்கு எந்த அதிகாரியை போய் சந்திப்பது என்று தெரியாமல் அலைகழிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் இல்லாததால் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு திட்டங்களும் சரிவர நடைபெறுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாக ஆணையர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக திருநின்றவூர் நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 More update

Next Story