தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை
தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் கூறினார்.
ஊட்டி
தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் கூறினார்.
ஆய்வு கூட்டம்
ஊட்டியில் மாவட்ட அதிகாரிளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். அரசு கண்காணிப்பு அலுவலர் டி.என்.வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்த்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் ஆற்றிய பணிகள் மிகச்சிறப்பாக இருந்தது.
தயார் நிலையில் இருக்க வேண்டும்
வருகிற செப்டம்பர் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தற்போது பணியாற்றியது போல் சிறப்பாக பணியாற்ற வேண்டும். நெடுஞ்சாலைத்துறை மூலம் தேவையான எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதேபோல் இயற்கை பேரிடர் ஏற்படும் போது கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் தட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை வேகப்படுத்துவதுடன் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னும் எழுத்து திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அறிவுசார் மையம்
முன்னதாக, மாவட்ட கண்காணிப்பு அரசு சிறப்பு செயலாளர் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில், கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.135 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் பல்வேறு நலத்திட்ட பணிகளை பார்வையிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சப் கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்மனோகரி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் தி.காந்தி ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.