நம்பிக்கை இல்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டதால் தோகைமலை ஒன்றியக்குழுத்தலைவியின் பதவி பறிபோனது


நம்பிக்கை இல்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டதால் தோகைமலை ஒன்றியக்குழுத்தலைவியின் பதவி பறிபோனது
x

தோகைமலை ஒன்றியக்குழுவில் நம்பிக்கை இல்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டதால் தலைவியின் பதவி பறிபோனது.

கரூர்

தி.மு.க. பலம் கூடியது

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியக்குழுவிற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க.வில் 10 கவுன்சிலர்கள், தி.மு.க.வில் 4 கவுன்சிலர்கள், பா.ஜ.க.வில் ஒரு கவுன்சிலரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து தோகைமலை ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த லதா தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பாப்பாத்தி சின்னவழியான் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அ.தி.மு.க.வில் வெற்றி பெற்ற 8 கவுன்சிலர்கள் விலகி தி.மு.க.வில் இணைந்து கொண்டனர். இதேபோல் தி.மு.க.வில் வெற்றி பெற்ற ஒரு கவுன்சிலர் தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார். இதனால் அ.தி.மு.க.வின் பலம் 3-ஆக குறைந்து, தி.மு.க.வின் பலம் 11-ஆகவும் உயர்ந்தது. இதனால் ஒன்றியத்தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டது.

புகார் மனு

இந்நிலையில் கடந்த 3.2.2023 அன்று தி.மு.க.வை சேர்ந்த 11 ஒன்றிய கவுன்சிலர்களும் சேர்ந்து ஒன்றியக்குழு தலைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், உள்ளாட்சி பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தோகைமலை ஒன்றியக் குழுத்தலைவராக லதா உள்ளார். அவரது கணவர் ரெங்கசாமி ஒன்றியக் குழு நடவடிக்கைகளில் அதிகமாக தலையிடுவதோடு, அரசு வாகனங்கள் அனைத்திற்கும் தனது சொந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோலை நிரப்புமாறு உத்தரவிட்டு உள்ளார். மேலும் அவர் சொல்பவருக்கு மட்டுமே அனைத்து ஒப்பந்தங்களும் விடப்பட வேண்டும் எனவும், இதேபோல் ஒன்றிய பொது நிதியில் பல்வேறு முறைகேடுகளை ஒன்றிய குழுத்தலைவரின் கணவரும், அவரது உறவினர்களும் ஈடுபட்டு வருவதால் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. எனவே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் குளித்தலை ஆர்.டி.ஓ. தலைமையில் நம்பிக்கை இல்லாதீர்மானம் குறித்து நடைபெறும், சிறப்பு கூட்டத்தில் ஒன்றிய குழுத்தலைவர், துணத்தலைவர் உள்பட அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் ஆஜராக வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

சிறப்பு கூட்டம்

இதனையடுத்து நேற்று குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பா தலைமையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் சிறப்பு கூட்டம் நடந்தது.

தோகைமலை ஒன்றிய ஆணையர் விஜயகுமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாப்பாத்தி சின்னவழியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 11 தி.மு.க. கவுன்சிலர்கள், பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 12 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு தலைவி லதா மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இதையடுத்து கூட்டத்தில் தோகைமலை ஒன்றியக்குழுத்தலைவர் லதா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேர் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு கவுன்சிலர் மொத்தம் 12 கவுன்சிலர்களும் தங்களது கைகளை உயர்த்தி நம்பிகை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை அடுத்து ஒன்றிய குழு தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பபட்டு, முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தோகைமலை ஒன்றியக்குழுத்தலைவி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ. மாணிக்கம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கூடிநின்றனர். இதனால் குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story