மானாவாரி சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்


மானாவாரி சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
x

மடத்துக்குளம் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் மானாவாரி சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் மானாவாரி சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

அமராவதி அணை

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது.மேலும் வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.இந்த பகுதிகளின் முக்கிய பாசன ஆதாரமாக அமராவதி அணை உள்ளது.அமராவதி ஆறு, பிரதான கால்வாய் மற்றும் ராஜ வாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.இதுதவிர இறவைப்பாசனம் மூலமும் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேநேரத்தில் பருவமழையை நம்பி வானம் பார்த்த பூமிகளில் மானாவாரியில் அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர்.சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்கள் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டாலும் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.

சாகுபடிப் பணிகள்

தற்போது மழை ஈரத்தைப் பயன்படுத்தி நிலத்தை உழுது பக்குவப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'நடப்பு ஆண்டில் தென் மேற்குப் பருவமழை விவசாயிகளுக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.வடகிழக்குப் பருவமழையும் கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால் மழைப் பொழிவு தொடங்கும் போதே சாகுபடிப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் ஓரளவு விளைச்சல் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கியுள்ளோம்.மழையையும் அதிர்ஷ்டத்தையும் நம்பித்தானே விவசாயிகளின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.குறைவில்லாமல் மழைப்பொழிவு இருக்க வேண்டும்.சிறப்பான விளைச்சல் பெற வேண்டும்.விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது'என்று விவசாயிகள் கூறினர்.

------------



Next Story