குப்பைக்கிடங்கில் 2-வது நாளாக தீ; பொதுமக்கள் 'திடீர்' சாலைமறியல்


குப்பைக்கிடங்கில் 2-வது நாளாக தீ; பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
x

நெல்லை ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் நேற்று 2-வது நாளாக பற்றி எரிந்த தீயால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. எனவே தீயை உடனடியாக அணைக்க வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை ராமையன்பட்டி பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ளது. அங்கு 32.5 ஏக்கர் பரப்பளவில் குப்பைகளை கொட்டும் இடம் உள்ளது. மாநகராட்சி சார்பில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கு கொட்டப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அந்த குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் இதுபற்றி பாளையங்கோட்டை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 3 லாரிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, துைண ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோரும் நேற்று சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி புகை மண்டலமாக மாறியது. இதனால் அங்கிருந்து வெளியேறிய புகை மண்டலம் ராமையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவு வரை மையம் கொண்டது. நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குப்பைக்கிடங்கு அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு சென்றனர்.

இந்த நிலையில் தீயை உடனடியாக அணைக்க வலியுறுத்தி ராமையன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட் தலைமையில் அந்த ்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோரும் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், கூடுதல் சூப்பிரண்டு ஆறுமுகம், மாநகராட்சி உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும், சிலர் வேண்டுமென்றே குப்பைக்கிடங்கிற்கு தீ வைத்து விடுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அடுத்த ஆண்டும் இதுபோன்ற தீவிபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஊர் மக்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலைமறியல் போராட்டத்தையொட்டி தச்சநல்லூர் வழியாக நெல்லை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ரஸ்தா, தாழையூத்து வழியாக திருப்பி விடப்பட்டன.


Next Story