துவரம் பருப்பு விலை தாறுமாறாக அதிகரிப்பு
அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
நாகா்கோவில்:
அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
மளிகை பொருட்கள் விலை உயர்வு
மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கிவிடும். விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருப்பது குறித்து நாகர்கோவில் அப்டா மார்க்ெகட்டில் உள்ள பலசரக்கு மொத்த விலைக்கடை வியாபாரி செந்தில் கூறியதாவது:-
துவரம் பருப்பு
தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, மராட்டியம் போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக துவரம் பருப்பு, சீரகம், நல்லெண்ணை ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.90 அளவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சீரகம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ சீரகம் ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நல்லெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.290-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு லிட்டர் ரூ.440-க்கு விற்பனை ஆகிறது.
அரிசி விலை உயர்வு
அதேபோல மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை பட்டியல்
நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ மொத்த விலையில்)
துவரம் பருப்பு- ரூ.150 முதல் ரூ.160 வரை, சிறுபருப்பு- ரூ.100, உளுந்தம் பருப்பு- ரூ.100 முதல் ரூ.110 வரை, உருட்டு கடலை- ரூ.120, கடலை பருப்பு- ரூ.65 முதல் ரூ.70 வரை, மிளகாய் தூள் (அரை கிலோவில்)- ரூ.210, தனியா தூள்- ரூ.180 முதல் ரூ.200 வரை, மஞ்சள் தூள்- ரூ.150, சீரகம்- ரூ.600 முதல் ரூ.620 வரை, சோம்பு- ரூ.310, கடுகு- ரூ.90, மிளகு- ரூ.590 முதல் ரூ.600 வரை, வெந்தயம்- ரூ.85, ஆட்டா (10 கிலோ) - ரூ.580 முதல் ரூ.600 வரை, மைதா (10 கிலோ) - ரூ.550, சர்க்கரை (50 கிலோ மூடை) - ரூ.2,000, வெல்லம்- ரூ.70, புளி- ரூ.90 முதல் ரூ.100, பூண்டு- ரூ.80 முதல் ரூ.160 வரை (ரகத்துக்கு ஏற்ப), முந்திரி- ரூ.650, திராட்சை- ரூ.200, சன் பிளவர்- ரூ.110, நல்லெண்ணெய்- ரூ.440, தேங்காய் எண்ணெய்- ரூ.140 முதல் ரூ.200 வரை, டால்டா (அரை கிலோவில்) - ரூ.75, ஏலக்காய்- ரூ.500, தனியா- ரூ.100, பச்சை பட்டாணி- ரூ.78, வெள்ளை பட்டாணி- ரூ.75, கருப்பு சென்னா- ரூ.80, சாதா பொன்னி (26 கிலோ மூடை) - ரூ.1,200, மீடியம் பொன்னி - ரூ.1,200, முதல் ரக பொன்னி - ரூ.1,500, பாசுமதி சாதா- ரூ.2,700, பாசுமதி மீடியம் ஒரு கிலோ- ரூ.80 முதல் ரூ.160 வரை, இட்லி அரிசி(ஒரு கிலோ)- ரூ.45.