பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்


பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்
x

பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

துர்க்கை அம்மன் கோவில்

சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர் திருவிழா கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி உள்காப்பு மற்றும் வெளிகாப்பு கட்டுதல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து மணி நதி அணைக்கட்டில் இருந்து பச்சை பரப்பி சக்தி அழைத்தல், சூரிய பிரபை, சந்திர பிரபை, மயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா, அய்யனார், துர்க்கை அம்மனுக்கு ஊரணி பொங்கல், எல்லைச்சட்டி உடைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, யாக வேள்விகள் நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். தேரோட்டத்தை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன் தொடங்கி வைத்தார். விழாக்குழு தலைவர் ஆறுமுகம், செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் செந்தில்குமார் மற்றும் விழா குழுவினர், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் அசைந்து ஆடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story