பள்ளி நேரங்களில் அரசு பஸ்களில் மாணவர்கள் 'திக்.. திக்' பயணம்


பள்ளி நேரங்களில் அரசு பஸ்களில் மாணவர்கள் திக்.. திக் பயணம்
x

பள்ளி நேரங்களில் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு திக்.. திக்.. பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

விருதுநகர்

பள்ளி நேரங்களில் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு திக்.. திக்.. பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கூட்ட நெரிசல்

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கான பஸ்கள் வெகுவாக குறைக்கப்பட்ட நிலையில் தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வரும் மாணவ-மாணவியர் பஸ்களில் இடம் இல்லாத நிலையில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும்நிலை தொடர்கிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள் எச்சரித்த போதிலும் இதனை தவிர்க்க முடியவில்லை. தேவையில்லாமல் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் மாணவ-மாணவியருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் நிலையும் உள்ளது.

விபத்து ஏற்படும் நிலை

இதனால் பள்ளி நேரங்களில் மாணவ-மாணவியர் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. விருதுநகரில் நேற்று மாலையில் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அவர்களின் திக்... திக் பயணத்தை பார்த்து திகில் அடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட திருச்சுழி பகுதியில் கூட்ட நெரிசலில் பயணித்த மாணவி உயிரிழந்த நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள் பஸ்சில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்படுகிறது. மேலும் தற்போது பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் கல்லூரி மாணவிகள் கல்வி நிறுவன வாகனங்களை தவிர்த்து விட்டு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் பஸ்களை இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தேவைப்படும் பஸ்களை கணக்கெடுத்து அதற்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இது பற்றி போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் கலந்தாய்வு செய்து கூடுதல் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மாணவ, மாணவியரும் விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்து கழக ஊழியர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story