பணியின் போதுஅரசு ஊழியர் சங்க நிர்வாகி விபத்தில் பலி
தேனியில் பணியின்போது அரசு ஊழியர் சங்க நிர்வாகி விபத்தில் பலியானார்.
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வசித்தவர் முத்தையா (வயது 50). இவர், தேனி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளராக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆகிய பொறுப்புகள் வகித்து வந்தார். கடந்த 17-ந்தேதி முத்தையா தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்லும் புறவழிச்சாலையில், தனியார் விளையாட்டு கிளப் அருகில் சாலையோரம் வளர்ந்து இருந்த செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அந்த வழியாக அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் முத்தையா மீது மோதியது. இதில் முத்தையா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஜெகநாதனும் கீழே விழுந்து காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த முத்தையா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய மகன் சின்னச்சாமி (29) கொடுத்த புகாரின் பேரில், ஜெகநாதன் மீது அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.