வடகிழக்கு பருவமழையையொட்டி தேனி மாவட்டத்தில் 43 இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: நிரந்தர வெள்ளத்தடுப்புச்சுவர் தேவை; விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு


வடகிழக்கு பருவமழையையொட்டி   தேனி மாவட்டத்தில் 43 இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு:  நிரந்தர வெள்ளத்தடுப்புச்சுவர் தேவை; விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி தேனி மாவட்டத்தில் 43 இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளன. இதனால் ஆற்றின் கரையோரம் நிரந்தர வெள்ளத்தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி

வடகிழக்கு பருவமழை

"தென்மேற்கு பருவக் காற்று தேனி பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்..." என்று கவிஞர் வைரமுத்து கருத்தம்மா படத்தில் பாடல் எழுதி இருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக் காலம் என்பது இன்பச்சாரலாக மட்டுமே இருக்கவில்லை. மக்கள் திட்டித்தீர்க்கும் அளவுக்கு கொட்டித்தீர்த்த நாட்களும் உண்டு. சராசரி மழையளவை விடவும் அதிக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை காலம் கொடுத்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை காலத்தைவிடவும், வடகிழக்கு பருவமழை காலம் தான் தேனி மாவட்டத்துக்கு அதிக மழைப் பொழிவை கொடுக்கும். மூலவைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான். 'வைகை ஆற்று வெள்ளம் யானையையும் இழுத்து வரும்' என்று சொல்லும் அளவுக்கு கனமழை காலங்களில் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

தேனி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 829.8 மில்லிமீட்டர் ஆகும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தின் சராசரி மழையளவு 170.8 மி.மீ. ஆகும். அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தின் சராசரி மழையளவு 382.04 மி.மீ. ஆகும்.

கடந்த ஆண்டு பாதிப்பு

கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 370.56 மி.மீ., வடகிழக்கு பருவமழை காலத்தில் 662.72 மி.மீ. என சராசரி அளவை விடவும் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த ஓராண்டு சராசரி மழையளவு 1424.31 மி.மீ. ஆகும். இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில்தான் அதிக அளவு பெய்துள்ளது.

கடந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவை விட அதிக மழை பெய்ததில் விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மற்றொரு புறம் அதிக பாதிப்புகளையும் கொடுத்துள்ளது. பயிர் பாதிப்பு, மலைப்பபாதைகள் துண்டிப்பு, வீடுகள் சேதம் என பல பாதிப்புகள் ஏற்பட்டன.

குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சுமார் 400 வீடுகள் மழைக்கு இடிந்து சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, நெல் போன்ற விளை பயிர்கள் நாசம் ஆகின. இதனால் இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

43 இ்டங்கள் கண்டுபிடிப்பு

இந்த பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ந்தேதி தொடங்க இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் குமுளி மலைப்பாதை மிக அதிக பாதிப்பு ஏற்படும் பகுதியாகவும்,

போடிமெட்டு மலைப்பாதை, உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகள் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாகவும், மேகமலை, குச்சனூர் உள்பட 40 இடங்கள் பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.அதிக மழைபெறும் காலங்களில் நீர்வரத்து அதிகரித்தால் வெள்ளப்பெருக்கின் போது அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆற்றங்கரைப்பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

மழையினால் பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகளுடைய 66 தங்கும் இடங்கள் தேர்வு செய்து தயார் நிலையில் உள்ளன. அணைகளை திறக்க நேரிட்டால் உடனே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்த தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவித்திட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப்பொருட்களான அரிசி, மண்எண்ணெய், காலி சாக்கு பைகள் ஆகியவற்றினை போதுமான அளவு இருப்பு வைத்திடுமாறு மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரணம் கிடைக்கவில்லை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், "மழையால் பயிர்கள் பாதிக்கப்படும்போது நிவாரணம் பெறுவதில் விவசாயிகள் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பயிர் காப்பீடு செய்தாலும், வருவாய் கிராம பகுதிகள் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டால் தான் நிவாரணம் கொடுக்க முடியும் என்ற விதி உள்ளது. அதை தளர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சில விவசாயிகளுக்கு கடுமையான பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு கிடைப்பதில்லை.

அதுபோல், பலத்த காற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கிடைப்பது இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராயப்பன்பட்டி பகுதியில் பலத்த காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, பலத்த காற்றால் பயிர் பாதிக்கப்பட்டாலும், மழையால் ஒரு விவசாயி பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டு விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்" என்றார்.

உப்புக்கோட்டையை சேர்ந்த டிரைவர் ஜெகன் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் வெள்ளம் வரும்போது கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் மக்கள் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். தற்காலிகமாக மணல் மூட்டைகளால் தடுப்பு அமைக்கிறார்கள். அதை தவிர்த்து நிரந்தரமாக வெள்ளத்தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் அச்சமின்றி வாழ வழிபிறக்கும்" என்றார்.


Next Story