துரியோதனன் படுகளம்
வடுகசாத்து கிராமத்தில் துரியோதனன் படுகளம் நடந்தது.
ஆரணி
ஆரணி அருகே வடுகசாத்து கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி கடந்த மாதம் 21-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் இன்று காலை நடந்தது.
இதையொட்டி கோவில் அருகில் சுமார் 150 அடி நீளத்திற்கும், 60 அடி அகலத்திலும் துரியோதனனை களிமண்ணால் வடிவமைத்து அலங்காரம் செய்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து நாடக கலைஞர்கள் துரியோதனனும் பீமனும் சண்டையிடும் காட்சியை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தொடையில் தாக்கி படுகளம் செய்தார்.
அதன் பின்னர் பாஞ்சாலி சபதம் முடித்து கூந்தலை அள்ளி முடிக்கும் காட்சி நடந்தது.
இதையடுத்து மாலையில் காப்பு கட்டி விரதமிருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை (திங்கட்கிழமை) தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராமமக்கள் செய்திருந்தனர்.