11 அம்மன் கோவில்களில் தசரா திருவிழா


11 அம்மன் கோவில்களில் தசரா திருவிழா
x
தினத்தந்தி 22 Oct 2023 7:00 PM GMT (Updated: 22 Oct 2023 7:01 PM GMT)

பாளையங்கோட்டையில் நாளை 11 அம்மன் கோவில்களில் தசரா திருவிழா நடக்கிறது.

திருநெல்வேலி

குலசேகரன்பட்டினத்துக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் தசரா திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதேபோல் தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி அம்மன், விசுவகர்ம உச்சிமகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில், பேராட்சி அம்மன் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சப்பர பவனி

நாளை (செவ்வாய்க்கிழமை) ஆயிரத்தம்மன், பேராட்சி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், உலகம்மன், முப்புடாதி அம்மன் உள்ளிட்ட 11 அம்மன் கோவில்களிலும் காலையில் துர்கா ஹோமமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு உச்சிக்கால சிறப்பு பூஜையும் நடக்கிறது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு 11 அம்மன் கோவில்களிலும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 11 மணிக்கு 11 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வருகிறார்கள்.

சூரசம்ஹாரம்

நாளை மறுநாள் (புதன்கிழமை) 11 அம்மன் கோவில் சப்பரங்களும் காலை 6 மணிக்கு பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவித்து நிற்கும். அப்போது சிறப்பு பூஜை நடைபெறும். இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ராஜகோபாலசாமி கோவில் அருகிலும், இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியிலும் அணிவகுத்து நிற்கும். அங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் ஒன்றுகூடி அணிவகுத்து நிற்கும். அதனை தொடர்ந்து சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் 11 அம்மன்களுக்கும் சிறப்பு தீபாராதனை நடக்கின்றது.


Next Story