புழுதி பறக்கும் சாலை... புலம்பும் வாகன ஓட்டிகள்
கோவை செல்வபுரத்தில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
செல்வபுரம்
கோவை செல்வபுரத்தில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
புழுதி பறக்கும் சாலை
கோவை நகரம் முழுவதும் 24 மணி நேர குடிநீர் குழாய் அமைத்தல், நெட்வெர்க் கேபிள் பதித்தல், சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்தும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக பல இடங்களில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் குண்டும், குழியுமாக உள்ளது. அது மட்டுமல்ல வாகனங்கள் செல்லும்போதும், வாகனங்களில் செல்லும் போதும் புழுதி பறக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு அடர்த்தியாக புழுதி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
கோவையின் முக்கிய சாலையான செல்வபுரம் சாலையில் புழுதி பறக்கிறது. சாலை விரிவாக்க பணியால் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு இங்கு தற்காலிகமாக மண் கொட்டப்பட்டு அதன்மீது தண்ணீர் ஊற்றி இருந்தது. தற்போது தண்ணீர் ஊற்றாததால் அங்கு அதிகளவு புழுதி பறக்கிறது. சில நேரங்களில் சாலையே தெரியாத அளவிற்கு இப்பகுதி முழுவதும் புழுதி சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையை எப்போது தான் அதிகாரிகள் சீரமைப்பார்கள் என்றும் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
செல்வபுரம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன.
தார்ச்சாலை அமைக்க வேண்டும்
இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் கிடக்கின்றன. இதனை மண்கொண்டு மூடினர். அவ்வாறு மூடிய மண் புழுதிப்புயல் போன்று பறக்கிறது. இதனால் அங்கு அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகின்றது. மேலும், நீண்டதூரம் புழுதியின் வழியாக வாகனங்களை ஓட்டுவதால் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகின்றனர். இதேபோல் இவ்வழியாக தொடர்ச்சியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது. அந்த சாலையோரம் வசிக்கும் பொதுமக்களும் சிரமப்படுகிறாா்கள். எனவே இந்த ரோட்டில் புழுதி பறப்பதை தடுப்பதற்கு தார்ச்சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினா்.