காட்சிப் பொருளான குப்பை சேகரிப்பு வாகனங்கள்


காட்சிப் பொருளான குப்பை சேகரிப்பு வாகனங்கள்
x
தினத்தந்தி 1 July 2023 8:35 PM IST (Updated: 2 July 2023 3:35 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை நகராட்சியில் குப்பை சேகரிப்பு வாகனம் பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

உடுமலை நகராட்சியில் குப்பை சேகரிப்பு வாகனம் பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குப்பை சேகரிப்பு வாகனம்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் பல்வேறு தரப்பட்ட சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொதுமக்களும் அதிக அளவில் கிராமப்புறத்தில் இருந்து நகரத்துக்கு வருகை தருகின்றனர். குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலமாக நகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பெண் பணியாளர்கள் தள்ளு வண்டிகளில் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். வண்டிகள் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து குப்பைகளை விரைந்து சேகரிப்பதற்கு ஏதுவாக பேட்டரியில் இயங்கக்கூடிய வண்டிகள் வாங்கப்பட்டு உள்ளது.

காட்சிப்பொருளாக நிறுத்திவைப்பு

ஆனாலும் குப்பைகள் அதிகரிப்பால் விரைந்து பணியை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து புதிதாக வண்டிகள் வாங்கப்பட்டது. அந்த வண்டிகள் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதே போன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்காக வாங்கப்பட்ட தள்ளு வண்டிகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் நகராட்சி வளாகத்திலேயே காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அவை இயற்கை சீற்றத்தால் சேதம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட வாகனங்கள், தள்ளுவண்டிகள் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. என்ன காரணத்திற்காக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரியவில்லை.

அதிகாரிகள் நடவடிக்கை

இதனால் வாகனங்கள், வண்டிகள் வாங்கப்பட்டதற்கான நோக்கமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. எனவே அதிகாரிகள் தள்ளு வண்டிகள் மற்றும் குப்பை சேகரிப்பதற்காக வாங்கப்பட்ட வாகனங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story