சாயப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.6 லட்சம் அபராதம்
சேலத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய சாயப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம்:-
சேலத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய சாயப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாக்கடை கால்வாய்
சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியில்லாமலும், கழிவுநீரை சுத்திக்கரிக்காமல் வெளியேற்றிய சாயப்பட்டறைகள் மற்றும் சலவை தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் சேலம் ஆண்டிப்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெற்று செயல்பட்டு வந்த ஒரு சாயப்பட்டறையில் பூஜ்ஜிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் அதை இயக்காமல் கழிவுநீரை சாக்கடை கால்வாயில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்க வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ரூ.6 லட்சம் அபராதம்
அதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அந்த சாயப்பட்டறை மூடப்பட்டது. மேலும் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுதவிர அந்த சாயப்பட்டறையின் உரிமையாளருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெற்ற சாயப்பட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றினால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.