பட்டப்பகலில் கால்வாயில் பாய்ந்த சாயக்கழிவு நீர்
பட்டப்பகலில் கால்வாயில் பாய்ந்த சாயக்கழிவு நீர்
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் கடந்த பல வருடங்களாகவே சாயக்கழிவு நீர் பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில வருடங்கள் நொய்யல் ஆற்றில் வெட்ட வெளிச்சமாக சாயக்கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் ஆறு முற்றிலும் மாசு பட்டது. இதேபோல் பல இடங்களில் நிலத்தடி நீரின் தன்மையும் மாறியது. இதை தடுக்கும் விதமாக மாநகரில் ஆங்காங்கே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, பனியன் நிறுவனங்கள் மற்றும் சாய ஆலைகளில் இருந்்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் சாயக்கழிவு நீர் பிரச்சினை பெருமளவில் குறைந்துள்ளது.
பட்டப்பகலில் சாயக்கழிவு நீர்
இருந்தாலும், ஒரு சிலர் இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் திறந்து விடுகின்றனர். இது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர நிறுத்தப்படவில்லை. நொய்யல் ஆறு, ஓடைகளில் சாயக்கழிவு நீர் கலக்கப்படுவது ஒருபுறமிருக்க, மாநகரில் ஆங்காங்கே கழிவு நீர் கால்வாய்களிலும் சாயக்கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது. நேற்று வாலிபாளையம் ராஜாராவ் வீதி அருகே, சாய்பாபா கோவில் செல்லும் வீதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் சாயக்கழிவு நீர் பாய்ந்து கொண்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற செயல்கள் இரவு நேரங்களில் அரங்கேற்றப்படும் நிலையில் நேற்று பட்டப்பகலில் கால்வாயில் சாயக்கழிவு நீர் கலக்கப்பட்டது. இந்த கால்வாயில் அவ்வப்போது பல்வேறு வண்ணங்களில் சாயக்கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் மாநகரில் ஆங்காங்கே இதுபோன்று நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு தடுப்பார்களா?.