இ-சேவை மையம், ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு


இ-சேவை மையம், ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
x

ஓமலூர் அருகே இ-சேவை மையம் மற்றும் ரேஷன் கடையில் நேற்று கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

சேலம்

சேலம்:

ஓமலூர் அருகே இ-சேவை மையம் மற்றும் ரேஷன் கடையில் நேற்று கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

ரேஷன் கடையில்

ஓமலூர் அருகே வெள்ளாளப்பட்டியில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது அவர், ரேஷன் பொருட்கள் அளவு சரியாகவும், தரமானதாகவும் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கருப்பூர், வெள்ளாளப்பட்டியில் பொதுமக்களுக்கான இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

100 சேவைகள்

இ-சேவை மையங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள், அரசு கேபிள் டி.வி நிறுவனம் உள்ளிட்ட 470 இடங்களில் இயங்கி வருகின்றன.

இந்த இ- சேவை மையங்களில் பிறப்பு சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ்,வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெற்று பயனடையலாம்.

சேலம் மாவட்டத்தில் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் என மொத்தம் 1,601 ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களும் தரமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

இதைத்தொடர்ந்து கருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு மருந்து, மாத்திரைகளின் இருப்புகள், பிறப்பு சான்றிதழுக்கான பதிவேடுகள், வெளிநோயாளிகளின் வருகை குறித்த பதிவேடுகளை சரிபார்த்தார். பின்னர் நாய்கடி, பாம்புக்கடி உள்ளிட்ட விஷ முறிவு மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது, ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story