டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய மழை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்யத்தொடங்கியது. லேசான சாரல் மழையாக பெய்யத்தொடங்கிய மழை தொடர்ந்து விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்யத்தொடங்கியது. லேசான சாரல் மழையாக பெய்யத்தொடங்கிய மழை தொடர்ந்து விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. விடிய, விடிய பெய்த இந்த மழை நேற்று காலை 9.30 மணி வரை நீடித்தது. மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி பரவலான மழை விடிய, விடிய பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 34 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு மழை ஓய்ந்து வெயில் அடித்தது.
மயிலாடுதுறை-நாகப்பட்டினம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் பனிப் பொழிவு இருந்த நிலையில் இரவு மிதமான தூறல் மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 29 மி.மீ. மழை பதிவானது.
நாகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை 8 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதேபோல் நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்தது.