50 வயது தொழிலாளிக்கு காதணி விழா
ரிஷிவந்தியம் அருகே 50 வயது தொழிலாளிக்கு காதணி விழா சிறுவயதில் நிறைவேறாத ஆசையை மகன்கள், உறவினர்கள் நிறைவேற்றி வைத்தனர்
ரிஷிவந்தியம்
ஐம்பதிலும் ஆசை வரும் என்று சினிமா பாடல் ஒன்று உண்டு. இதற்கு ஏற்றார் போன்று தொழிலாளி ஒருவருக்கு 5 வயதில் நிறைவேறாத காதணி விழா நிகழ்ச்சியை 50 வயதில் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் நிறைவேற்றி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே அரங்கேறி உள்ளது.
அதன்விவரம் வருமாறு:-
ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையன் மகன் ஏழுமலை(வயது 50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு சங்கீதா(45) என்ற மனைவியும், வேடியப்பன்(22), மணி(20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
ஏழை குடும்பத்தில் பிறந்த ஏழுமலைக்கு சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக அவரது பெற்றோர் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆசையை அவர் தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி வேதனையுற்றார். இதை கேட்ட அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் ஏழுமலையின் சிறுவயது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
அதன்படி ஜம்படை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் சூழ்ந்து நிற்க ஏழுமலைக்கு மாமா மடியில் அமர்ந்து மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.