3¼ லட்சம் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி மும்முரம்
திருவாரூர் மாவட்டத்தில் 3¼ லட்சம் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 3¼ லட்சம் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஆதார் இணைப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதில் இளைஞர்கள் பலர் தங்களுடைய செல்போனிலேயே ஆதாரை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து விடுகிறார்கள்.
தனியார் கணினி மையம் மற்றும் மின் வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்றும் மின் இணைப்பு எண்- ஆதார் இணைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.
குறுந்தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின் வாரிய அலுவலங்களிலும் ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை உடனுக்குடன் இணைத்து கொடுக்கிறார்கள்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மின் கோட்டத்தில் 1 லட்சத்து 57 ஆயிரம் வீட்டு இணைப்புகள், மன்னார்குடி மின் கோட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் வீட்டு இணைப்புகள் என 3 லட்சத்து 37 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மின் நுகர்வோரின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆதார் அட்டை அவசியம்
அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி வரை ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் செயல்படும். மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். தாங்கள் ஏற்கனவே மின்கட்டணம் செலுத்தி வரும் மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு கண்டிப்பாக ஆதார் அட்டை உடன் எடுத்து வர வேண்டும்' என்றனர்.