ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம்: 82 ஆயிரத்து 849 மின் இணைப்பு எண்களுடன் ஆதாா் இணைப்பு
ஈரோடு மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம் மூலமாக 82 ஆயிரத்து 849 மின் இணைப்பு எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம் மூலமாக 82 ஆயிரத்து 849 மின் இணைப்பு எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளது.
ஆதார் எண் இணைப்பு
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்பட்டால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும். எனவே ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்தி வரும் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்களை ஆன்லைன் மூலமாகவே இணைத்து விடுகிறார்கள். மேலும், மின் அலுவலகத்தில் சென்று மின் கட்டணம் செலுத்தும்போது ஆதார் எண் கொடுத்தும் இணைத்து கொள்ளலாம் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் ஆதார் எண் இணைப்பதில் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்தது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் தங்களது ஆதார் எண்ணை தான் இணைக்க வேண்டுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இதற்கு முழுமையான விளக்கம் மின்சார வாரியம் சார்பில் அளிக்கப்பட்டு இருக்கிறது. 100 யூனிட் மின்சாரம் எந்தவகையில் தடை படாது என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என்றும், வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டு உரிமையாளரின் ஒப்புதல் கொடுத்தால் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
சிறப்பு முகாம்
பொதுமக்களும் ஆர்வமாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள். இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தினமும் காலை 10.30 மணியில் இருந்து மாலை 5.15 மணி வரை மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் 2 கணினிகள் மூலமாக ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இதில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மின்சார வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டையின் அசல் அல்லது நகல், மின் இணைப்பு அட்டை அல்லது மின் இணைப்பு எண் எழுதி எடுத்து வந்து கொடுத்தால் கணினி மூலமாக இணைத்து கொடுக்கப்படும். அதற்கான குறுந்தகவல் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு சென்றுவிடும். இந்த முகாம் பண்டிகை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரத்தில் 7 நாட்களுக்கும் செயல்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை முகாம் நடைபெறும்.
82,849 மின் இணைப்புகள்
ஈரோடு நகரியம், ஈரோடு தெற்கு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 6 கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளிலும் முகாம் நடக்கிறது. மேலும், பொதுமக்கள் பலர் தாங்களாகவே ஆன்லைனில் ஆதார் எண்ணை இணைத்து கொள்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 9 லட்சத்து 15 ஆயிரத்து 227 இணைப்புகளில் 82 ஆயிரத்து 849 மின் இணைப்புகளில் ஆதார் எண் சேர்க்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.