மோட்டார் சைக்கிள் மோதி மின் வாரிய அதிகாரியின் மனைவி பலி
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரியின் மனைவி பலியானார்.
தாராபுரம்
தாராபுரத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரியின் மனைவி பலியானார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார்சைக்கிள் மோதல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிழக்கு பெரியார் தெருவை சேர்ந்தவர் சோழன் (வயது48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலனூர் அலுவலகத்தில் லயன் இன்ஸ்பெக்டராக வேைல பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா தேவி (38). ேசாழன், சரண்யா தேவி இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த தேவி (50) மற்றும் உமாதேவி (45) ஆகிய 4 பேரும் தினமும் காலையில் தாராபுரம்- அலங்கியம் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அதேபோல் நேற்று காலை 5 மணிக்கு சோழன், சரண்யா தேவி, தேவி மற்றும் உமா தேவி ஆகிய 4 பேரும் அலங்கியம் ரோட்டில் நடைபயிற்சி சென்றனர். இவர்கள் ராம் நகர் பகுதியில் சென்றபோது அவர்களுக்கு பின்னால் அலங்கியம் நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபயிற்சி சென்ற 4 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நடைபயிற்சி சென்ற 4 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அதேபோல் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களும் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தனர். பின்னர் அந்த ஆசாமிகள் மீண்டும் எழுந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு தப்பிச்சென்றனர்.
பெண் பலி
இந்த விபத்தில் சோழன், சரண்யாதேவி, தேவி மற்றும் உமாதேவி 4 பேரும் உதவிகேட்டு அபயக்குரல் எழுப்பினர். இவர்களது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரண்யா தேவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும்வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேவி மற்றும் சோழன் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உமா தேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர் இந்தவிபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சோழன்- சரண்யா தேவி தம்பதிக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
----