விளைநிலங்களில் சரிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்


விளைநிலங்களில் சரிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 2 July 2023 4:51 PM GMT (Updated: 3 July 2023 8:37 AM GMT)

குடிமங்கலம் அருகே விளைநிலங்களில் சரிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்பூர்

விபத்து அபாயம்

குடிமங்கலத்தை அடுத்த விருகல்பட்டியிலிருந்து வல்லகுண்டாபுரம் செல்லும் சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்கள் அருகிலுள்ள விளைநிலங்களில் விழும் நிலையில் படிப்படியாக சாய்ந்து வருகின்றன.

இதனால் மின் கம்பிகள் தொய்வடைந்து மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. ஒருசில இடங்களில் கீழே உள்ள சீமைக்கருவேல மரங்களில் உரசிக்கொண்டுள்ளன. இதனால் மின் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

நடவடிக்கை

விளைநிலங்களுக்கு கனரக வாகனங்களில் இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களை கொண்டு செல்லும் போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக வைக்கோல், சோளத்தட்டை உள்ளிட்ட தீவனப் பொருட்களை கொண்டு செல்லும்போது மின் கம்பங்களில் உரசி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் விரைவில் பருவமழை தொடங்கி விவசாயப் பணிகள் நடைபெற உள்ளது.

அதுபோன்ற சூழ்நிலையில் மின் கம்பங்கள் சரிந்து விளைநிலங்களுக்குள் விழக்கூடும். இதனால் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மின் கம்பிகள் சாலையில் அறுந்து விழும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மின் கம்பங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story