ஈச்சனாரி கோவில் கும்பாபிஷேக விழா


ஈச்சனாரி கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 23 Aug 2023 9:00 PM GMT (Updated: 23 Aug 2023 9:01 PM GMT)

கோவை ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

கோயம்புத்தூர்


ஈச்சனாரி


கோவை ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.


ஈச்சனாரி விநாயகர் கோவில்


கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் புகழ்பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 20-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.


இதை தொடர்ந்து அன்று காலை திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, மண் எடுத்தல், காப்பு அணிவித்தல், முதல் கால 2-ம் கால மற்றும் 3-ம் கால வேள்வி பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.


கும்பாபிஷேகம்


விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் மங்கள இசை, திருமுறை பாராயணம், 4-வது மற்றும் 5-வது கால வேள்வி உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.


தொடர்ந்து நேற்று அதிகாலையில் மூலத்திருமேனியை அடைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டதுடன் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் செய்யப்பட்டது. மாலையில் திருவீதி உலாவும் நடந்தது.


அமைச்சர் பங்கேற்பு


இந்த கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர் பாபு, கலெக்டர் கிராந்திகுமார், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், பிள்ளையார்பட்டி சிவனடியார், மேயர் கல்பனா, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செ.தாமோதரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக கும்பாபிஷேகம் நடந்தபோது அதை பார்க்க அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிலர் அந்தப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது ஏறி நின்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டதை பார்த்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story