10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி எதிரொலி: தற்கொலை எண்ணத்தில் இருந்த 123 மாணவிகள் கல்வித்துறை கவுன்சிலிங்


10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி எதிரொலி: தற்கொலை எண்ணத்தில் இருந்த 123 மாணவிகள் கல்வித்துறை கவுன்சிலிங்
x

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை எண்ணத்தில் 123 மாணவிகள் இருந்ததை தமிழக அரசு கண்டறிந்துள்ளது. அவர்களின் எண்ணத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை கவுன்சிலிங் அளித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவு பாதகமாக இருக்கும் என்று கருதிய சில மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வருவதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டனர். சில மாணவ, மாணவிகள் தேர்வு முடிவில் தோல்வி அடைந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்டனர்.

தேர்வு முடிவுகளையொட்டி ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்குவதற்காக தனி தொலைபேசி எண்களையும் (14417, 1098) பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த எண்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கின.

மன அழுத்தம்

சில அழைப்புகளில் பெற்றோரும், சில அழைப்புகளில் மாணவ, மாணவிகளும், சில அழைப்புகளில் 2 பேருமே பேசியுள்ளனர். அப்போது மாணவர்களின் மனநிலையை அறிந்து, தற்கொலைகளை தடுக்கும் நோக்கத்தில் தகுந்த கவுன்சிலிங்கை மனநல ஆலோசகர்கள் மூலம் பள்ளிக் கல்வித்துறை வழங்குகிறது.

அந்த வகையில் அரசுக்கு 22-ந்தேதிவரை வந்த தொலைபேசி அழைப்புகளில் 10-ம் வகுப்பு மாணவிகளில் 123 பேருக்கு மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் தொடர்ந்து சாப்பிடாமல் அழுதபடியே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தற்கொலை மிரட்டல்

அவர்களிடம் பேசியபோது, 'தற்கொலை செய்யலாம் என்றிருக்கிறேன்; கணக்கு பாடத்தில் தவறியதால் சாப்பிடப் பிடிக்கவில்லை; தேர்வு முடிவு வந்த பிறகு என் மகளை காணவில்லை, போலீசில் புகார் அளித்துள்ளோம்; தற்கொலை செய்வதாக மகள் மிரட்டுகிறாள்;

தற்கொலை பற்றியே பேசுகிறாள்; தேர்வு முடிவுகள் வந்ததில் இருந்து சாப்பிடவில்லை; தொடர்ந்து அழுகிறாள்; தனியாக இருக்கிறாள்; மறு தேர்வு எழுத பயம்; மற்றவர்களை பார்க்க வெட்கம் மற்றும் குற்ற உணர்வுடன் இருக்கிறாள்; கடும் மன உளைச்சலில் இருப்பதால் எங்களுக்கும் மகளுக்கும் உடனடியாக கவுன்சிலிங் வேண்டும்,' என அந்த அழைப்புகளில் பேசியுள்ளனர்.

அவர்களிடம் பேசிய அடிப்படையில், 99 சதவீதம் பேரை கவனமுடன் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் (ஹை ரிஸ்க்) என்று அரசு கருதுகிறது. 123 பேரில் 6 பேர் தூக்கு, விஷம், மாத்திரை போன்றவற்றின் மூலம் தற்கொலைக்கு முயன்றவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனநல ஆலோசகரிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது:-

ஆலோசனைகள்

மாணவிகள், பெற்றோர் பேசும்போது நாங்கள் மிகுந்த ஆறுதலான வார்த்தைகளையும், தற்கொலை எண்ணத்தை தவிர்க்கும் கருத்துகளையும் கூறுகிறோம். தற்கொலை செய்துவிட்டால் மட்டும் பாடத்தில் 'பாஸ் மார்க்' போட்டுவிடப்போவதில்லை. தற்கொலை என்பது மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் மேலும் அவமானத்தையே ஏற்படுத்தும்.

கல்லூரி மாணவ, மாணவிகளில் பலர் தேர்வுகளில் தோற்று, அடுத்ததாக எழுதி வெற்றி பெறுகின்றனர். அவர்களில் யாராவது பாடத்தில் தோல்வியுற்றதற்காக தற்கொலை செய்கிறார்களா? எந்த படிப்புக்குச் சென்றாலும் அங்கு சில நேரங்களில் தோல்வி ஏற்படுவது இயல்புதான். இன்று இருக்கும் மனபாரம், அழுத்தம் நாளை இருக்காது. ஆனால் நாளைக்கு நீங்கள் இருக்க வேண்டும்.

மனபாரம் நாளாக நாளாக மறைந்து பின்னர் இயல்பு நிலைக்கு வந்துவிடுவீர்கள். எனவே இனி என்ன செய்ய வேண்டும்? என்பதைப்பற்றி மட்டும் யோசியுங்கள். பெற்றோருடன் இணைந்திருங்கள். தனியாக உட்கார்ந்து, யாரும் உங்களை கேலி செய்வதுபோல சிந்திக்க வேண்டாம், என்றெல்லாம் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story