'தினத்தந்தி' செய்தி எதிரொலி; இடைகால் சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது


தினத்தந்தி செய்தி எதிரொலி; இடைகால் சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக இடைகால் சர்வீஸ் ரோட்டில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக இடைகால் சர்வீஸ் ரோட்டில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாலம் கட்டும் பணி

நெல்லையில் இருந்து பேட்டை, கல்லூர், முக்கூடல், பாப்பாக்குடி, இடைகால் வழியாக பொட்டல்புதூர், கடையம், அம்பை உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. அந்த பஸ்களில் ஏராளமானோர் நெல்லைக்கு வேலைக்கு வந்து செல்கிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களும் அந்த சாலையில் அதிகளவில் சென்று வருகின்றன.

இந்த சாலையில் பாப்பாக்குடி அருகே உள்ள செங்குளம் மற்றும் இடைகால் விலக்கிற்கு நடுவே சாலையில் இருந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

பொதுமக்கள் அவதி

இதனால் அந்த வழியாக வாகனங்கள் கடந்து செல்வதற்கு வசதியாக, அதன் அருகே சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அந்த மண் சாலையில் வாகனங்கள் செல்லும்போது சக்கரங்கள் மண்ணில் பதிந்ததால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் பாலம் கட்டும் பகுதிக்கு முன்னதாகவே, செங்குளத்தில் இருந்து பனையங்குறிச்சி கிராமம் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் சென்றனர். மேலும் அந்த சாலையும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

''தினத்தந்தி செய்தி எதிரொலி''

எனவே, பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் பாலம் அமைக்கும் பணி முடிவடையும் வரை, மூடப்பட்ட சர்வீஸ் ரோட்டை தரமானதாக மேம்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் கடந்த 27-ந்தேதி செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். பாலம் கட்டுமான பணி அருகில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த சர்வீஸ் ரோட்டில் ஜல்லி, மண் கலவையை கொட்டி மேம்படுத்தினார்கள். பின்னர் மூடப்பட்ட சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்துக்கும் அனுமதி அளித்தனர்

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story