லண்டன் நிகழ்ச்சி ஒத்திவைப்பு எதிரொலி: பென்னிகுயிக் சிலைக்கு கலெக்டா் மாலை அணிவித்து மரியாதை


லண்டன் நிகழ்ச்சி ஒத்திவைப்பு எதிரொலி:  பென்னிகுயிக் சிலைக்கு கலெக்டா் மாலை அணிவித்து மரியாதை
x

லண்டன் நிகழ்ச்சி ஒத்திவைப்பு எதிரொலியாக லோயர்கேம்பில் உள்ள அவரது சிலைக்கு தேனி கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேனி

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவை போற்றும் வகையில் அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பரளி நகரின் மைய பூங்காவில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெற இருந்தது. இதற்காக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் லண்டன் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு காரணமாக அங்கு 10 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிலை திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் லோயர்கேம்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக்கின் முழு உருவ வெண்கல சிலைக்கு இன்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கூடலூரை சேர்ந்த சிற்பி இளஞ்செழியன் என்பவர் தர்ப்பூசணியில் பென்னிகுயிக் உருவம் வரைந்து கலெக்டரிடம் வழங்கினார்.

கூடலூர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, சுகாதார அலுவலர் சக்திவேல், (தெற்கு) கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story