பீகாரில் ரெயில்களுக்கு தீவைப்பு எதிரொலி: சென்னையில் இருந்து செல்லும் வடமாநில ரெயில்கள் ரத்து


பீகாரில் ரெயில்களுக்கு தீவைப்பு எதிரொலி: சென்னையில் இருந்து செல்லும் வடமாநில ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 18 Jun 2022 4:49 AM IST (Updated: 18 Jun 2022 10:15 AM IST)
t-max-icont-min-icon

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து இயக்கப்படும் வடமாநில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

ராணுவத்துக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் 'அக்னிபத்' திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து 3-வது நாளாக நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் வடமாநிலங்களில் ரெயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்தும், அந்த வழித்தடம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பயணிகளுக்கு ரத்து செய்யப்பட்ட பயணத்துக்கான பணம் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* ஐதராபாத்-சென்டிரல் (12604) இடையே மாலை 4.45 மணிக்கும், ஐதராபாத்-தாம்பரம் (12760) இடையே மாலை 6 மணிக்கும், பாட்னா-எர்ணாகுளம் (22644) இடையே மதியம் 2 மணிக்கும் நேற்று (17-ந்தேதி) இயக்கப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் மைசூரு-தர்பங்கா (12578) இடையே நேற்று காலை 10.30 மணிக்கு மைசூரில் இருந்து இயக்கப்பட்ட பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் பங்காருபேட்டை ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

இன்று மற்றும் நாளை

பெங்களூரு-தானாபூர் (12295) இடையே நேற்று காலை 9.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக சென்டிரல் ரெயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் பெங்களூருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரெயில் இன்றும் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்டிரல்-ஐதராபாத் (12603) இடையே இன்று மாலை 4.45 மணிக்கும், தாம்பரம்-ஐதராபாத் (12759) இடையே இன்று மாலை 5.10 மணிக்கும், திருவனந்தபுரம்-செகந்திராபாத் (17229) இடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கும் இயக்கப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* எர்ணாகுளம்-பாட்னா (22643) இடையே மாலை 5.15 மணிக்கு வருகிற 20-ந்தேதி இயக்கப்பட இருந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்டம்

சென்னையில் ரெயில்கள் திடீர் ரத்து செய்யப்பட்டதால் சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று வடமாநிலம் நோக்கி செல்லும் பயணிகள் பரிதவிப்புடன் சுற்றிதிரிந்ததை பார்க்க முடிந்தது. இதனால் ரெயில் நிலையம் முழுவதும் பயணிகளின் கூட்டமாகவும், பரபரப்பாகவும் காட்சியளித்தது. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்ட மூத்த கமிஷனர் செந்தில் குமரேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக வடமாநிலங்களில் பெரும்பாலான ரெயில் சேவைகளை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல் செகந்திராபாத் வழியாக டெல்லி, போன்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு வந்த இடங்களுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் ரெயில் ஓடாத சூழல் நிலவுகிறது. எனவே சூழல் சரியாகும் வரை சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் இயங்காது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீஸ், முழு நேரமாக ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story