பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி: ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. பிரமுகர்களின் வீடு, அலுவலகம், கடை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம், பா.ஜ.க. நிர்வாகிகள் வீடு, இந்து முன்னணி அலுவலகம், இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
உடைமைகள் சோதனை
இந்த நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், நடைமேடைகளிலும், ஓடும் ரெயில்களிலும் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகிறார்கள். அப்போது சந்தேகப்படும்படி உள்ள நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.