எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் போட்டி அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு


எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் போட்டி அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு
x

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் போட்டி அ.தி.மு.க. அலுவலகம் திறக்கப்பட்டது.

திருச்சி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழிநடத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதே கருத்தை வலியுறுத்தி கூட்ட அரங்கிற்கு வெளியேயும் ஏராளமானோர் கோஷம் எழுப்பினர். இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் பூதாகரமாக கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டி தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுவிலும் இரு தரப்பு ஆதரவாளர்களும் மாறி, மாறி கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து வருகிற 11-ந் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக அறிவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து வருகிறார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு நிர்வாகிகள் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைக்கும் வகையில் கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் புதிதாக அலுவலகம் திறந்துள்ளனர். பின்னர் அங்கு அவசர ஆலோசனை கூட்டமும் நடந்தது.இதில் முன்னாள் அமைச்சர் சிவபதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். திருச்சி தென்னூர் பகுதியில் ஏற்கனவே அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அலுவலகம் இயங்கி வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டியாக புதிய அலுவலகம் திறந்து இருப்பது திருச்சி அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story