திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து கவர்னரிடம் மனு அளித்துள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வினர் புகார் மனு அளித்தனர். சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து பேரணியாக சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் 9 பேர் சந்தித்து புகார் மனு அளித்தனர். பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பேரணியில் பங்கேற்றதால் கிண்டி முதல் அண்ணாசாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கவர்னரை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். நாங்கள் அளித்துள்ள புகார் மனுக்களை பரிசீலனை செய்வதாக கவர்னர் கூறியிருக்கிறார். தினந்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். விஷச்சாராய உயிரிழப்புகள், விஏஓ வெட்டிக்கொலை உள்ளிட்டவற்றை எடுத்து கவர்னரிடம் கூறியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன.
போலி மதுபானம் குடித்து உயிரிழந்தார்கள் என்ற செய்தி வெளியே வரக்கூடாது என அரசு முயற்சி செய்கிறது. போலி மதுபான விற்பனை, கள்ளசாராய விற்பனை குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரியும். போலி மதுபான விற்பனை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. போலி மதுபான விற்பனை வருமானம் மேலிடத்திற்கு செல்கிறது. நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் திமுக அரசில் பாதிக்கப்படுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை. உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. திமுக ஆட்சியில் ரவுடிகள், திருடர்கள் காவல்துறையை கண்டு பயப்படுவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.