'மக்களை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவலை இல்லை' எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருப்பூர்,
மக்கள் எவ்வளவு எதிர்பார்த்தார்கள். 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று கனவு கண்டார்கள். ஆனால் அது கானல் நீரானது. 525 தேர்தல் வாக்குறுதி வெளியிட்டார். ஆனால் அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கியாஸ் சிலிண்டர் மானியம், கல்வி கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உள்ளிட்ட எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது போடப்பட்ட திட்டங்களைதான் இன்று இவர் தொடங்கி வைக்கிறார். வேறு எந்த புதிய திட்டமும் கொண்டு வரவில்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தவுடன் தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் விலை குறைக்கப்பட்டது. மத்திய அரசை குறை சொல்வதுதான் இவருக்கு வேலை.
மக்களை பற்றி கவலை இல்லை
கடுமையான மின் கட்டண உயர்வு, வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எதில் கமிஷன், கலெக்சன், கரப்சன் வருமோ அதைத்தான் பார்க்கிறார்கள். நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சர்.
ஏன் எங்களுக்கு வரி உயர்வு செய்ய தெரியாதா? மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஒரு ஆட்சியாளன் மக்களின் நிலையை உணர்ந்து அதற்குத்தக்கவாறு ஆட்சி புரிய வேண்டும். அதுதான் உண்மை ஆட்சிக்கு அடையாளம். அதுவே மக்களாட்சி. ஜனநாயக முறைப்படி ஆட்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.