எதிர்க்கட்சியினர் மீது நடத்தும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப்போராடி வெல்வோம்.
சென்னை,
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அதிமுக முன்னாள் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குதல் போன்ற தீய செயல்களில் திமுக அரசினர் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக உரிமைத் தொகையினை வழங்காதது முதல் மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து வரை எந்த உறுதி மொழியையும் நிறைவேற்றாத விடியாத திமுக அரசு, முதலில் வீட்டு வரியினை கடுமையாக உயர்த்தியது. தற்போது மின்கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.
பெண்களுக்கான தாலிக்கு தங்கம், மகளிர் இருசக்கர வாகனம் உள்ளிட்ட எண்ணற்ற நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியுள்ளது இந்த மக்கள் விரோத அரசு. இதனால் கொதித்து போயுள்ள மக்களின் துயர் துடைக்க வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் 3வது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதல் அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார். ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தியுள்ள நிலையில் 3வது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.
திமுக அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? தற்போது தமிழகமெங்கும் நில அபகரிப்பு செய்யும் தனக்கு வேண்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா? எனவே எதிர்கட்சிகள் மீது பொய்ப் புகார் புனைந்து காவல்துறை மூலம் பழிவாங்கும் போக்கை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப்போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. திமுக அமைச்சர்களை போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்க பார்க்கமாட்டோம். காவல் துறையினர் நடுநிலைமையோடு, ஆளுங்கட்சியின் அடாவடிதனத்திற்கு அடிபணியாமல் சட்டத்தின்படி நீதி நேர்மையோடு பணியாற்ற வேண்டும். இவ்வ்வாறு அதில் கூறியுள்ளார்